ரூ.5 கோடி மோசடி செய்து நகைகள் வாங்கி குவித்த பரமக்குடி ஊழியர்


ரூ.5 கோடி மோசடி செய்து நகைகள் வாங்கி குவித்த பரமக்குடி ஊழியர்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலைபார்த்த நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த பரமக்குடி ஊழியர் நகைகள் வாங்கி குவித்துள்ளார். 210 பவுன், ரூ. 2½ லட்சம் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

வேலைபார்த்த நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த பரமக்குடி ஊழியர் நகைகள் வாங்கி குவித்துள்ளார். 210 பவுன், ரூ. 2½ லட்சம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.5 கோடி மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின்(வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் அகஸ்டின் ரூ.5 கோடி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த நிறுவனத்தினர் அகஸ்டின் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து அகஸ்டின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் அகஸ்டின் முறைகேடு செய்த பணத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நகைக்கடைகளில் விதவிதமாக தங்க நகைகள் வாங்கியதாக தெரியவந்தது.

210 பவுன் நகைகள்

நேற்று முன்தினம் பரமக்குடி காமராஜர் தெருவில் உள்ள அகஸ்டின் தாயார் வீட்டிலும், பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் அகஸ்டின் மாமியார் ஜெயராணி வீட்டிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் தெருவில் உள்ள தாயார் வீட்டில் ரூ. 2½ லட்சம் மற்றும் 10 பவுன் நகையும், அகஸ்டின் மாமியார் ஜெயராணி வீட்டில் 200 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து செபஸ்தியம்மாள், ஜெயராணி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது பற்றிய தகவல் தெரிந்த அகஸ்டின் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story