விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு


விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
x

வங்கி சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது

திருச்சி

வங்கி சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் செங்காளக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 50) விவசாயி. இவர் திருச்சி அருகே ஆவூரில் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் பட்டுப்புழு வளர்ப்புக்காக மானிய கடன் வாங்க, சூரியூரில் உள்ள ஒரு வங்கியை அணுகினார். இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கடன் ஒதுக்கீடு செய்து அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதில் இருந்து ரூ.16 ஆயிரத்து 500 வழங்கிய நிலையில், அந்த வங்கி கணக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கி அதிகாரிகள் முடக்கினர்.

இதனால் மானியமும் கிடைக்காமல் போய்விட்டது. இதுபற்றி அவர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, நீங்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி அந்த தொகை நிலுவையில் உள்ளது. ஆதலால் அதை கட்டி முடிக்கும் வரை இந்த தொகையை நீங்கள் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் 2017-ம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவருடைய வங்கி கணக்கிலிருந்து மேலும் ரூ.71 ஆயிரம் கடன் தொகையை எடுத்து விட்டார்கள். இதனால் வங்கி நிர்வாகம் அவருக்கு ஒதுக்கிய கடன் தொகையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. மேலும் வங்கி அதிகாரிகளின் சேவை குறைபாட்டால் பட்டுப்புழு வளர்ப்பிற்காக சாகுபடி செய்திருந்த மல்பரி செடிகளும் வீணாகி போனது. என்ன நோக்கத்திற்காக அவர் வங்கியில் கடன் வாங்கினாரோ அதுவும் நிறைவேறாமல் போய்விட்டது.

ரூ.5 லட்சம் இழப்பீடு

இதனால் மனமுடைந்த அவர் தனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை திருச்சி நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர்.காந்தி மற்றும் உறுப்பினர்கள் செந்தில்குமார், சாயீஸ்வரி ஆகியோர் விசாரணை செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட விவசாயி சின்னதுரைக்கு இழப்பீடாக சம்பந்தப்பட்ட வங்கி ரூ.5 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும். இந்த தொகைைய 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.


Next Story