ரூ.5 லட்சம் நகை கொள்ளை
கோவை நீலிக்கோணாம்பாளையத்தில் தச்சுத்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை நீலிக்கோணாம்பாளையத்தில் தச்சுத்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தச்சுத்தொழிலாளி
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 49), தச்சுத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிட வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. அதுபோன்று வீட்டின் அலமாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கிடந்தன. உடனே அவர் பீரோவில் வைத்திருந்த நகையை தேடி பார்த்தபோது அவற்றை காணவில்லை.
ரூ.5 லட்சம் நகை
அந்த பீரோவில் இருந்த செயின், ஆரம், வளையல், மோதிரம், கைச்செயின் என்று மொத்தம் 19½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோபால், சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் வந்து விசாரணை நடத்தியதுடன், அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.