சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் சென்னை வந்தனர் - போர் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது என உருக்கம்


சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் சென்னை வந்தனர் - போர் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது என உருக்கம்
x

சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். சூடானில் நிலவி வரும் அசாத்திய சூழலால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அதனடிப்படையில் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க ''ஆபரேஷன் காவேரி'' மூலமாக மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சூடானில் இருந்து 360 இந்தியர்கள் முதற்கட்டமாக ''ஆபரேஷன் காவேரி'' மூலம் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். டெல்லி வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் அரசு செலவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரையை சேர்ந்தவர். இவர்கள் டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், தியா, கிருத்திகா, வேலூரை சேர்ந்த சோபியா, சந்தோஷ்குமார் ஆகிய 5 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். அப்போது சூடானில் இருந்து வந்த தங்கள் பிள்ளைகளை கண்டதும் அவரது பெற்றோர் கட்டி அணைத்து ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதுபற்றி பள்ளி மாணவி தியா கூறுகையில், 'சூடான் நாட்டில் நடக்கும் போரினால் எனது கல்வி படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் வசிக்கும் பகுதியில் கடும் சண்டை நடக்கிறது. மின்சாரம், தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. இந்திய தூதரக அதிகாரிகள் பஸ்கள் மூலம் மீட்கப்பட்டு 26 மணி நேர பயணத்திற்கு பின் பாதுகாப்பான இடத்திற்கு வந்தோம். பின்னர் இந்திய அரசு விமானம் மூலம் ஜெத்தா வந்து அங்கிருந்து டெல்லி வந்தோம். இந்த அனுபவத்தை மறக்க முடியாது என கூறினார்.

மடிப்பாக்கத்தை சேர்ந்த கிருத்திகா கூறுகையில், 'சூடானில் நடக்கும் உள்நாட்டு போர் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. 2 நாளில் முடிந்து விடும் என காத்திருந்தோம். ஆனால் நாங்கள் 3-வது நாள் பாரா ராணுவ முக்கிய அதிகாரி வீட்டின் அருகில் இருந்தால் நடந்த துப்பாக்கி சூட்டில் கார், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று வீட்டனர். சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்து ஒரே ஒரு துணியுடன் வந்து உள்ளோம். இந்தியா தூதரக அதிகாரி உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளோம். மீண்டும் சூடானுக்கு செல்லும் எண்ணம் இல்லை' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.


Next Story