வெவ்வேறு சம்பவங்களில புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் இறந்தனர்.
புதுமாப்பிள்ளை
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 29). இவருடைய மனைவி கீர்த்தனா. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் வயிற்றுவலியால் அவதி அடைந்து வந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் தந்தை மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டல் தொழிலாளி
திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகரை சேர்ந்தவர் அன்சார்அலி (30). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஷபானாபானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக அன்சார்அலி கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அன்சார்அலி சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண் பிணம்
திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் காமராஜர் சிலை அருகே நேற்று முன்தினம் காலை 50 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ்பாத்திமா கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்து சாவு
சேலம் வீரணம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 49). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. திருமணமாகாத இவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் தற்கொலை
முசிறி பார்வதிபுரம் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (69). எலக்ட்ரீசியன். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.