மதுைர சித்திரை திருவிழாவில் "வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு"- செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
மதுரை சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செயல் திறன்
மதுரையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்.
இதுதான் காலம், காலமாக நடந்து வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களிடம் மகிழ்ச்சி இல்லாமல் போய் விட்டது. ஏனென்றால் கடந்தாண்டு 2 பேரும், இந்தாண்டு 5 பேரும் கள்ளழகர் வைபவத்தின் போது உயிரிழந்து விட்டனர். இந்த உயிரிழப்புக்கு தமிழக அரசின் செயலற்ற திறனே காரணம்.
வெறும் வாயில் வடை சுடும் அரசாக இந்த அரசு உள்ளது. வாய் பேச்சில் வீரனடி என்பது போல செயல் திறன் ஏதும் இல்லாமல் உள்ளது. பொதுவாக இது போன்ற மிகப்பெரும் திருவிழா நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் வகையில் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவார்கள். ஆனால் இது போன்ற எந்த நடவடிக்கையும் மதுரையில் எடுக்கப்படவில்லை.
சட்டம்-ஒழுங்கை சரியாக பராமரிக்காததால் ரவுடிகள், கொள்ளையர்கள் பக்தர்கள் வேடத்தில் கூட்டத்தில் புகுந்து விட்டனர். தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்டு உள்ளன. சி.பி.ஐ. அதிகாரி ஒருவரின் தாய் அணிந்திருந்த தங்க நகையையும் ஒரு கும்பல் பறிக்க முயன்று இருக்கிறது. ஆனால் அவர்கள் சுதாரித்து கொண்டதால் நகை தப்பியது.
சாமி தரிசனம்
திருப்பதி போன்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் உடனடியாக வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் பல லட்சம் பேர் கூடும் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த முக்கியத்துவத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு நடந்து உள்ளது.
வி.ஐ.பி.க்கள் மீது போலீசார் கூடுதல் கவனம் செலுத்துவதால் சாதாரண பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. வி.ஐ.பி.க்கள் தங்கள் உற்றார், உறவினர்கள் சகிதமாக அங்கு வந்து குவிந்து விடுகின்றனர். இவர்களின் பாதுகாப்பு பணியில் பல ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். அதே போல் கடவுள்களை தரிசனம் செய்வதிலும் வி.ஐ.பி.க்களுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. சாதாரண மக்களால் சாமியை தரிசனம் செய்ய முடியவில்லை.
ஆற்று பகுதிக்கு ஆர்வமாக மக்கள் வரத்தான் செய்வார்கள். ஆனால் அங்கு அவர்களை கட்டுப்படுத்த போலீசார் இல்லை. ஏன் போலீசார் இல்லை என்றால்? போலீசார் அனைவரும் வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். எனவேதான் இந்த நிலையை மாற்ற வேண்டும்.
விடியல் கிடைக்கவில்லை
இனி வரும் ஆண்டுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் வி.ஐ.பி. தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை. தில்லு முல்லு செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. திராவிட மாடல் என்பதே பொய்யும், பித்தலாட்டமும் தான் என்பதனை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். தி.மு.க.வினர், கவர்னரை மிகவும் கேவலமாக பேசுகின்றனர். அதற்கு பதிலடியாக கவர்னரும் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.