மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 July 2023 2:15 AM IST (Updated: 4 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக ஒரு கும்பல் சேகரித்தது. பின்னர் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 'உங்களது குழந்தைகளுக்கு அரசு மூலமாக கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது' என்று அரசு ஊழியர்கள் போல தெரிவித்தனர். மேலும் அந்த உதவித்தொகையை பெற வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய கூறினர். இது தவிர அவர்களது வாட்ஸ்-அப் செயலியின் டி.பி.யில் தமிழக அரசின் லோகோ வைக்கப்பட்டு இருந்தது.

பண மோசடி

இதனால் அவர்கள் கூறியது உண்மை என நம்பிய சிலர், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தனர். உடனே அவர்களது வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் அந்த கும்பல் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டது. இதில் கோவையில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டது. அவர்கள், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் டேவிட்(வயது 32), லாரன்ஸ் ராஜ்(28), ஜேம்ஸ்(30), எட்வின் சகாயராஜ்(31), மாணிக்கம்(34) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

குண்டர் சட்டம்

அவர்களை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துைர செய்யப்பட்டது. பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அவர்கள் 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரியிடம் போலீசார் அளித்தனர்.


Next Story