தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
கும்பகோணம்-திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்- மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம்-திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்- மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
நகை, பணம் வழிப்பறி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் ஒரு மர்ம கும்பல் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தும், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை திருடி செல்வதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மர்ம கும்பலை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடிவந்தனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த தனிப்படை போலீசார் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர்ந்து தினமும் பகல் மற்றும் இரவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் கும்பகோணம் செக்காங்கண்ணி தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பென்னி மகன் பிரவீன் குமார் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் சூர்யா (24),
முத்துப்பிள்ளை மண்டபம், ஒத்த தெரு பகுதியைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஹரி பாலாஜி (20),சண்முகவேல் மகன் ஆகாஷ் (20), காரைக்கால் மெயின் ரோடு விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி மகன் அருண் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
இந்த விசாரணையில் இந்த 5 பேரும் சேர்ந்து கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதியில் பொதுமக்களிடம் வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 13 விலை உயர்ந்த செல்போன்கள், 5 மோட்டார் சைக்கிள்கள்,10 கிராம் தங்கச் செயின், 2 கத்தி ஆகியவற்றை மீட்டனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.