மூதாட்டியிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
நொய்யல் அருகே மூதாட்டியிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5½ பவுன் சங்கிலி பறிப்பு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மருதாயி (வயது 68). இவர் அப்பகுதியில் உள்ள முனியப்பசாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.அதில் ஒருவர் இறங்கி சென்று டீக்கடையில் இருந்த பண்ணை கேட்டுள்ளார். இதையடுத்து மருதாயி கவரில் இருந்து பண்ணை எடுத்து கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மருதாயி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்தார்.
தப்பி சென்ற வாலிபர்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த மருதாயி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதைக்கண்ட அந்த வாலிபர் ஏற்கனவே ஒரு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் அங்கிருந்து கோம்புப்பாளையம் வழியாக தப்பி சென்றனர். இதையடுத்து பின்னால் அப்பகுதி பொதுமக்கள் துரத்தி சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சங்கிலியை பறிகொடுத்த மருதாயிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான 2 வாலிபர்களின் உருவங்களை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.