5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர்


5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செயல்படும் 5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவை பெரும்பாலும் மூடிக்கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செயல்படும் 5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவை பெரும்பாலும் மூடிக்கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சித்த மருத்துவமனைகள்

பொள்ளாச்சி நகராட்சியில் காமாட்சி நகர், வடுகபாளையம் ஆகிய பகுதிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர வடுகபாளையம் பூங்கா, அம்பேத்கர் வீதி, மார்க்கெட் ரோட்டில் சித்த மருத்துவமனைகளும், டி.கோட்டாம்பட்டி, நேதாஜி ரோட்டில் ஆயுர்வேத மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அம்பேத்கர் வீதியில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு சித்த மருத்துவமனை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிகமாக சிகிச்சைக்கு வருகின்றனர். இதற்கு தேவையான மருந்து, கசாய பொடி, தைலம் ஆகியவை கொடுக்கப்படுகிறது. ஆனால் சிகிச்சை அளிக்க ஒரு டாக்டரும், மருந்து கொடுக்க ஒரு மருந்தாளுனரும் மட்டுமே உள்ளனர். மேலும் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் திறக்கப்படுவதால், மற்ற நாட்களில் மூடியே கிடக்கிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

பற்றாக்குறை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் நகராட்சி மூலம் சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரத்தில் 500 முதல் 600 பேர் வரை வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கை கொரோனா பரவலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. சளி, காய்ச்சல், வலி நிவாரணம் உள்பட அனைத்துவித நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால் டாக்டர், மருந்தாளுனர் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு தேவையான டாக்டர்கள், மருந்தாளுனரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நகராட்சி மூலம் மருந்துகள்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

டாக்டர், மருந்தாளுனர் பற்றாக்குறை காரணமாக அனைத்து சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளும் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி திங்கள், புதன், வெள்ளி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வடுகபாளையம் பூங்கா சித்த மருத்துவமனை, மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேதாஜி ரோடு ஆயுர்வேத மருத்துவமனை, செவ்வாய், வியாழன், சனி காலையில் மார்க்கெட் ரோடு சித்த மருத்துவமனை, மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை டி.கோட்டாம்பட்டி ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் திறக்கப்பட்ட சித்த மருத்துவமனை வெள்ளிக்கிழமை காலையில் செயல்படும். இவைகளுக்கு தேவையான மருந்துகள் நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story