சேலம் பெண்கள் சிறையில் 5 கண்காணிப்பு கேமராக்கள்-சூப்பிரண்டு வினோத் தகவல்


சேலம் பெண்கள் சிறையில் 5 கண்காணிப்பு கேமராக்கள்-சூப்பிரண்டு வினோத் தகவல்
x

சேலம் பெண்கள் சிறையில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் கூறியுள்ளார்.

சேலம்

பெண்கள் சிறை

சேலம் பெண்கள் சிறையில் விசாரணை கைதிகள் மட்டும் அடைக்கப்படுவார்கள். கோர்ட்டில் விசாரணை முடிந்து தண்டனை விதிக்கப்படும் பெண் கைதிகள் கோவை சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதன்படி தற்போது சேலம் பெண்கள் கிளைச்சிறையில் ஒரு திருநங்கை உள்பட 65 பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பெண்கள் கிளை சிறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை கண்டுபிடிக்க பெண்கள் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து சேலம் மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சேலம் ஆண்கள் சிறையில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது பெண்கள் சிறையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் குறித்து கண்டுபிடிக்கவும், பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும், கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பெண்கள் சிறையின் நுழைவு வாசல், நேர்காணல் அறை, புதிய கைதிகள் வரும் போது அவர்கள் குறித்து பதிவு செய்யும் இடம், சமையல் அறை செல்லும் வழி உள்ளிட்ட 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் சிறையில் வைக்கப்பட்டு உள்ள கட்டுபாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும். விரைவில் ஆத்தூர் சிறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அதே போன்று தர்மபுரி சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story