பலத்த காற்றால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டன.
ராமேசுவரம்,
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டன.
மீன்பிடிக்க செல்ல தடை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அறிகுறி எதிரொலியாக வங்கக்கடல் பகுதியில் 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை தொடர்ந்து ராமேசுவரத்தில் நேற்று 700-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடல் உள்வாங்கியது
பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே உள்ளது.
குறிப்பாக தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரத்திற்கு சீறி எழுந்தது.
ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள பகுதி வெறும் மணல் பரப்பாக காட்சியளித்தது. மீண்டும் பகல் 1 மணிக்கு பிறகு கடல் நீர் சகஜ நிலைக்கு திரும்பியது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, இது போன்று காற்று வீசும் சீசனில் துறைமுக கடற்கரை, அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாகவே கடல் நீர் உள்வாங்குவதும், மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதும் நடைபெறுவதுதான் என்றனர்.