குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின் கட்டணம்


குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின் கட்டணம்
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:47 PM GMT)

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் உள்ள குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகர பகுதியான ஜி.ஆர்.பி. தெருவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூரை மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் இருந்த பழைய மின் மீட்டர்களை மின்வாரியத்துறை சார்பில் அகற்றிவிட்டு புதிய மின் மீட்டர்களை பொருத்திவிட்டு சென்றனர். புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதற்கு முன்பு வரை இங்குள்ள மக்கள், ரூ.250, ரூ.300, ரூ.400 என்ற வீதத்தில் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு இம்மாதம் மின் கணக்கீட்டாளர் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டண தொகையை மின் கட்டண அட்டையில் எழுதிவிட்டு சென்றுள்ளார்.

அதில் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மின் கட்டண உயர்வை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், இந்த தொகையை எப்படி செலுத்தப்போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதுபற்றி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் அதற்கு மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், எங்கள் வீடுகளில் குளிர்சாதன பெட்டி, குளிரூட்டும் பெட்டி, வாஷிங்மெஷின் போன்ற எதுவுமே கிடையாது. ஒரு டி.வி., ஒரு மின்விசிறி, 2 டியூப் லைட்டுகள்தான் இருக்கிறது. புதிய மின் மீட்டர்கள் பொருத்திவிட்டு சென்ற பிறகு இம்முறை மின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. 500 ரூபாய் செலுத்தி வந்த வீடுகளில் தற்போது ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். இந்த கட்டணத்தை எங்களால் செலுத்த இயலாது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி மின்வாரியத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, புதிய மின் மீட்டர்கள் என்பதால் வேகமாக ஓடியிருக்கலாம், அதனால் இதுபோன்று மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டிருக்கும். புதிய மின் மீட்டர்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.


Next Story