ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை


ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம்   படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x

புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை.

ராமநாதபுரம்

புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை.

புயல் சின்னம்

வங்க கடலில் உருவாகிய புயல் சின்னத்தை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று முதல் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

எனவே ராமேசுவரம், பாம்பன், தொண்டி, சோழியக்குடி, உப்பூர், ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர், முந்தல், மாரியூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டு படகுகளும் மற்றும் பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளில் இருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களையும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்றும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

வானம் மேகமூட்டம்

புயல் சின்னம் உருவாகி உள்ள நிலையிலும் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, வாலிநோக்கம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடல் அமைதியாகவே காட்சியளித்தது. பகல் முழுவதும் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டமாக இருந்தது.

2 நாட்களுக்கு சூறாவளி காற்று வீசக்கூடும்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நாளை வரை 2 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story