5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி


5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி
x

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை


5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீட் தேர்வு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது துறையின் பெயருக்கு ஏற்றப்படியே வெறும் விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார். தாத்தா, தந்தை வழியில்தான் அவருக்கு இந்த பதவி கிடைத்து இருக்கிறது. விளையாட்டு தனமாக யாரோ எழுதி தரும் கருத்துக்களை எல்லாம் அவர் பேசி வருகிறார். தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார். அடுத்தது, வீட்டில் இருக்கும் நகையை எல்லாம் போய் அடகு வையுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை.

வாய் சொல்லில் வீரனடி என்பது போல, தனது வாய்க்கு வந்ததை எல்லாம், தான் ஒரு அமைச்சர் என்பதனையும் மறந்து பேசி கொண்டு இருக்கிறார். சமூக நீதி குறித்து அவர் இப்போது முழங்கி கொண்டு இருக்கிறார். நான் கேட்கிறேன், 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. சமூக நீதிக்காக என்ன செய்தது? அவர்களால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் சமூக நீதிக்காக இதுவரை ஒன்றும் செய்ய வில்லை.

சட்டையை கிழித்து...

அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா, ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த தனபாலை சட்டமன்ற சபாநாயகராக அமர்த்தினார். அவர் சபைக்கு வந்தவுடன், அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும்படி செய்தார். இது தான் சமூக நீதி. ஆனால் இந்த தனபாலின் சட்டையை கிழித்து சபையில் அவமானப்படுத்தியது தி.மு.க. அதே போல் தலித் எழுமலையை திருச்சியில் பொதுத்தொகுதியில் நிறுத்தி அவரை வெற்றி பெற செய்து அமைச்சராக்கினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார். ஆனால் தி.மு.க. எதிராக வாக்களித்தனர். சமூக நீதியை பற்றி பேசுபவர்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டாமா?. சமூக நீதி என்பது வெறும் பேச்சாக இருக்க கூடாது. செயலில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story