5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sep 2023 10:45 PM GMT (Updated: 9 Sep 2023 10:45 PM GMT)

பழனியில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க உரிய சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.

அதன்படி பழனியில் நகராட்சி ஆணையர் பாலமுருகன் தலைமையில், நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக பஸ்நிலையம், பழைய தாராபுரம் ரோடு, காந்திரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் கவர்கள், டீ கப்புகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

பழனியில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று நடந்த இந்த திடீர் சோதனை மூலம் சுமார் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 120 கடைகளுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், பழனி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேவேளையில் மீண்டும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளின் விற்பனை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story