லாரி மீது கார் மோதியதில் 5 பெண்கள் நசுங்கி பலி
பரமத்திவேலூர் அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
பரமத்திவேலூர்
கோவிலுக்கு சென்று திரும்பினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, மோர்பாளையம் அருகே உள்ள பெத்தாம்பட்டி வட்டூரை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து, டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (43), கவிதாவின் தம்பியின் பெண் குழந்தை லக்ஷனா (4), இதே பகுதியை சேர்ந்த கந்தாயி (60), குஞ்சம்மாள் (65), காங்கேயம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி சாந்தி (35), கருமாபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சுதா (என்கிற) மகாலட்சுமி (36) ஆகிய 7 பேர் கரூர் மாவட்டம் வீரப்பூரில் நடைபெற்ற பொன்னர் சங்கர் கோவில் திருவிழாவிற்கு காரில் சென்றனர்.
அங்கேயே 3 நாட்கள் தங்கி கோவிலில் இருந்து விட்டு நேற்று முன்தினம் சொந்த ஊரான திருச்செங்கோடு வருவதற்கு இரவு அங்கிருந்து காரில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். காரை ரவி ஓட்டி வந்தார்.
5 பெண்கள் சாவு
நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே கார் வந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் கூச்சல் போட்டு அலறினர்.
இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் கந்தாயி, கவிதா, குஞ்சம்மாள் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக கூறினர். காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது குழந்தை லக்ஷனா ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் டிரைவர் ரவியின் மனைவி கவிதா, அவரது மாமியார் கந்தாயி ஆகியோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
விபத்தில் உயிரிழந்த மகாலட்சுமி, கந்தாயி, கவிதா, குஞ்சம்மாள் ஆகிய 4 பேரின் உடல்களும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கும், சாந்தியின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கோர விபத்து குறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கோரவிபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 வயது குழந்தை உயிர்தப்பியது எப்படி?
நின்று கொண்டு இருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில் இந்த விபத்து நடந்தது. இதில் காரின் மேற்கூரை சின்னா, பின்னமானது. இதனால் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தனர். ஆனால் டிரைவர் பகுதியில் சேதம் இல்லாததால் காரை ஓட்டி வந்த ரவி உயிர்தப்பினார்.
அதேபோல் விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் 4 வயது குழந்தை லக்ஷனா தூங்கி கொண்டு இருந்தது. இந்த விபத்தின் போது குழந்தை இருக்கைக்கு அடியில் விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்கள் கூறினர்.
டிரைவரின் தூக்கம் விபத்துக்கு காரணமா?
இந்த கோர விபத்து நடந்த நேரம் அதிகாலை 2.30 மணி. எனவே டிரைவர் தூக்கத்தில் கண் அசந்ததால் விபத்து நடந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் நீண்ட தூரம் பயணம் செய்யும் டிரைவர்கள் தூக்கம் வந்தால், வாகனங்களை ஓட்டக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோர விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையின் ஓரங்களில் இரவு நேரங்களில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை போலீசார் எச்சரிக்கை விடுத்தும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் தொடர்ந்து இது போன்ற கோர விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலை ஓரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.








