சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி
சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி
கோவை
கோவையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் 5 பேர் பலியானார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தனியார் என்ஜினீயரிங் கல்லூரி
கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் மாணவ-மாணவிகள் தங்கி படிக்க வசதியாக விடுதியும் உள்ளது.
இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே சுற்றுச்சுவர் (காம்பவுண்டு சுவர்) உள்ளது. கருங்கற்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுவர் 5 அடி உயரம் கொண்டது. இந்த சுற்றுச்சுவர் மிகவும் வலுவிழந்ததால், அந்த சுவரை ஒட்டி 5 அடி தூரத்தில் கான்கிரீட்டால் ஆன மற்றொரு சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக பழைய சுற்றுச்சுவரை ஒட்டி அஸ்திவாரத்திற்காக 5 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
தொடர்ந்து அங்கு சுற்றுச்சுவருக்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த பணியில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் கருங்கல்லால் ஆன பழைய சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து 100 அடி நீளத்துக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். கண்இமைக்கும் நேரத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது.
5 தொழிலாளர்கள் பலி
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (வயது 53), நக்கிலா சத்யம் (48), ரப்பாகா கண்ணையா (49), மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிஸ்கோஷ் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பருன் கோஸ் (35) என்பவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
அதிகாரிகள் விசாரணை
5 பேர் இறந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும், போலீஸ் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் ரகுபதி ராஜா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
சம்பவ இடத்துக்கு கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, உயிரிழப்பு சம்பவம் நடந்த தனியார் கல்லூரியின் காம்பவுண்ட் சுவர்கள் வலுவாக இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பலமுறை அறிவுறுத்தினார்கள். ஏற்கனவே இந்த கல்லூரியின் சுற்றுசுவர் சாந்திநகர் பகுதியில் கடந்த ஆண்டு இடிந்தது. தற்போது நடந்த சம்பவம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.