வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கோவை
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இளம் பெண் தற்கொலை
கோவை ஆடீஸ் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 35). இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வி (23) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி மாரிச்செல்வி திடீெரென தற்கொலை செய்துகொண்டார். திருமணமான ஒரு மாதத்துக்குள் மாரிச்செல்வி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் மாாிச்செல்வி கருப்பாக இருப்பதாக அடிக்கடி கூறி அவரை கணவர் கணேஷ்குமார் மன ரீதியாக தொந்தரவு செய்ததும், இதனால் மனமுடைந்த மாாிச்செல்வி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. மேலும் மாரிச்செல்வி எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனது மாமனார், மாமியார் நல்லவர்கள் என்றும், கணவருடன் வாழ முடியாது என்றும், பெற்றோர் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் எழுதியிருந்தார்.
5 ஆண்டு சிறை தண்டனை
இதையடுத்து கணவர் கணேஷ்குமார், அவருடைய மனைவி மாரிச்செல்வியை தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி குற்றம் சாட்டப்பட்ட கணேஷ்குமாருக்கு தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.