நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை


தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

திருக்கோவிலூர் நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் மூலம் கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை கும்பல் கொள்ளையடித்துச்சென்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

நகைக்கடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு வீதியில் பாபுலால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் உரிமையாளர்கள் நித்தீஷ், லோகேஷ் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று காலை வழக்கம்போல் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுடன் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கீழ்தளத்தில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முதல் மற்றும் 2-வது மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் காணவில்லை.

இரும்பு கதவை வெட்டி எடுத்து...

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 3-வது மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள இரும்பு கதவு, ஒரு நபர் உள்ளே நுழையும் வகையில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கதவு அருகே சிறிய கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன. நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட கும்பல், பின்புறத்தில் ஏணி மூலமாக 3-வது மாடிக்கு ஏறி வந்து, வெல்டிங் கியாஸ் மூலம் இரும்பு கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 75 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

பல கோடி ரூபாய் நகைகள் தப்பியது

மேலும் கொள்ளை கும்பல், கடையில் இருந்த லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியது. இதையடுத்து கடை நிர்வாகத்தினர் இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த நகைக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த கைரேகை, தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த கடையில் பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். அதோடு கள்ளக்குறிச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்து பஸ் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனிடையே கொள்ளையர்கள் போட்டுச் சென்ற கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தனிப்படைகள்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நகைக்கடையில் கொள்ளை கும்பல் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. 3 முதல் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். நகைக்கடையை ஒட்டியுள்ள கட்டிடங்கள் வழியாக ஏணி வைத்து நகைக்கடையின் 3-வது மாடிக்கு வந்த கொள்ளை கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவை வெட்டி எடுத்து விட்டு, உள்ளே புகுந்து கடையின் மின் இணைப்பையும், கண்காணிப்பு கேமரா இயக்கத்தையும் துண்டித்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குறிப்பாக அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வடமாநில கொள்ளையர்கள்

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் ஊத்தங்கரை நகைக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் மேற்கண்ட நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதா? எனவும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story