அடுத்தடுத்து 50 மின்மாற்றிகள் வெடித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து 50 மின்மாற்றிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 200 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து 50 மின்மாற்றிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 200 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
மின்கம்பி அறுந்து விழுந்தது
மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலத்தெரு முக்கிய கடைவீதி ஆகும். வங்கிகள், ஆஸ்பத்திரிகள், துணிக்கடைகள், பழக்கடைகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.நேற்று காலை 11 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்பு பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது. அப்பகுதியில் வங்கிக்கு எதிரே பழக்கடை வைத்துள்ள குணசேகரன் என்பவரின் தள்ளுவண்டி கடை மீது மின்கம்பி அறுந்து விழுந்தது.
உயிர் தப்பிய வியாபாரி
அப்போது அந்த கடையில் நிழலுக்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குடை இருந்ததால், மின் கம்பி அதன் மீது விழுந்து குடை மற்றும் பழங்கள் சேதம் அடைந்தது.இதைப்பார்த்த குணசேகரன் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
50 மின்மாற்றிகள் வெடித்தது
இதேபோல் மார்க்கெட் பகுதி, செட்டித்தெரு, தருமபுரம் ரோடு உள்ளிட்ட நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் அடுத்தடுத்து வெடித்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.இதன் காரணமாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பரபரப்பு
மின்மாற்றியில் உள்ள இன்சுலேட்டர் வெடித்ததால் நகரத்திற்குள் செல்லும் மின்கம்பிகள் அறுந்தததாகவும், இதனால் மற்ற மின்மாற்றிகள் வெடித்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பட்டமங்கலத்தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.