500 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை


500 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை
x
தினத்தந்தி 17 Sep 2023 7:15 PM GMT (Updated: 17 Sep 2023 7:16 PM GMT)

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 500 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 500 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா சார்பில் நீலகிாி மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகரம், மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் 369 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஊட்டியில் பூசாரிகள் பேரவை சார்பில் 45 சிலைகள், சிவசேனா சார்பில் 17 சிலைகள், அனுமன் சேனா சார்பில் 25 சிலைகள் என மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மூலம் பொது இடங்களில் 470 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் 500 சிலைகள் பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

விசர்ஜன ஊர்வலம்

இதைத்தொடர்ந்து இன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. ஊட்டியில் நடைபெறும் ஊர்வலத்தில் மத்திய மந்திரி முருகன் கலந்துகொள்கிறார். இதேபோல் பூசாரிகள் பேரவைகள், சிவசேனா சார்பில் ஊட்டியில் 21-ந் தேதியும், குன்னூரில் 22-ந் தேதியும், கூடலூரில் 24-ந் தேதியும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

கட்டுப்பாடு

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் செய்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நீர் நிலைகளில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்தல், மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.


Next Story