ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 500 பயணிகள்- ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி தொடக்கம்


ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 500 பயணிகள்- ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி தொடக்கம்
x

நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர். தொடர்ந்து கனமழை பெய்த வண்ணம் இருந்ததாலும், ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததாலும் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது.

இந்நிலையில் ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி இன்று காலையில் தொடங்கப்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ரெயிலில் உள்ள பயணிகளுக்கு சாலை வழியாக உணவு அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக சுமார் 2 டன் அளவிலான உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஹெலிகாப்டர் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றது. மேலும் ராமநாதபுரம் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பயணிகளை விரைந்து மீட்பதற்காக மேலும் 4 ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த விமானப்படையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.


Next Story