5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானாவாரி நில மேம்பாட்டு
கரூர் மாவட்டத்தில் நடப்பு 2022-23-ம் ஆண்டில் முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்க திட்டம் 5 ஆயிரம் எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டில் சுமார் 5 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட்டு 4,628 மானாவாரி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது, கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் பயன்பெறாத மானாவாரி நிலங்களின் விவசாயிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை வட்டாரங்களில் தலா 400 எக்டர், தாந்தோணியில் 600 எக்டர், க.பரமத்தி, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் தலா 800 எக்டர் பரப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
50 சதவீத மானியத்தில்
மானாவாரி சிறு, குறு விவசாயிகளுக்கு சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களுக்கு இலைவழி ஊட்டச்சத்து அளிக்கவும், உயிரியியல் இடுபொருட்கள் பயன்பாட்டை விவசாயிகளிடையே ஊக்குவிக்கவும், உயிரியியல் இடுபொருட்கள் இலைவழி இயற்கை உரத்தெளிப்பு மேற்கொள்வதற்கு ரூ.750 வீதம் எக்டருக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் மானாவாரி விவசாயிகளுக்கு, மானாவாரி பயிர்களான சோளம், துவரை, உளுந்து, கொள்ளு, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் மகசூலை அதிகரித்திட சான்று பெற்ற உயர்விளைச்சல் ரக விதைகள், ரசாயன உரத் தேவையினை குறைக்கும் வகையில் திரவ உயிர் உரங்கள் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
கூடுதல் வருமானம்
நச்சுத்தன்மையற்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிவப்பு கடல்பாசி ஜெல் எனும் இயற்கை உயிர் இடுபொருளை எண்ணெய் வித்துகள் தவிர இதர மானாவாரி பயிர்களுக்கு எக்டருக்கு 5 கிலோ வீதம் ரூ.1,250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினால் ஒரு எக்டருக்கு இடுபொருட்களுக்கான செலவு உள்பட ஒரு விவசாயிக்கு ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை சாகுபடி செலவு குறைவதுடன் விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதால் 25 சதவீதம் வரை கூடுதல் வருமானமும் கிடைத்திடும்.
மேலும், ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடையும் நோக்கத்துடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மானாவாரி விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இடுபொருட்கள்
முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள மானியம் தேவைப்படும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெறாத மானாவாரி விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் மானிய விண்ணப்பத்தினை அளித்து இடுபொருட்களை மானிய விலையில் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.