கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க கோரிக்கை


கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 July 2023 12:29 AM IST (Updated: 23 July 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு குறை கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

விவசாயி:- மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.

கலெக்டர்:- விவசாயிகள் தெரிவிக்கும் இடத்தை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் குறித்து வைத்துக்கொண்டு அவற்றில் பாசனக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், வரத்துக் கால்வாயை சீரமைக்கவும் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு வேலைகளை வழங்கிட வேண்டும்.

ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

விவசாயி:- பாலாறு அணைக்கட்டு பூண்டி வழியாக மகேந்திரவாடிக்கு வரும் கால்வாய் புதர் மண்டி கடைக்கோடியில் உள்ள நிலங்களுக்கு நீர் வரத்து கிடைக்காமல் போகிறது. கால்வாய் மற்றும் மதகுகளை சீரமைக்க வேண்டும்.

நெமிலியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. எங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கரும்பு பயிருக்கு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விவசாயிக்கு செலவாகிறது. ஆதலால் ஒரு டன்னுக்கு கொள்முதல் விலை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

மண் எடுக்க அனுமதி

சோளிங்கர் ஒன்றியம் மருதாலம்-ஜம்புகுளம் இடைப்பட்ட பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். வாலாஜா படியம்பாக்கம் பகுதியில் கல்குவாரி மற்றும் ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடத்தில் தூசிகள் பறந்து பயிர்கள் மீதும், கால்நடை தீவனங்கள் மீதும் படிகிறது. இதனால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. .

கலெக்டர்:- இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாயி:- பயிர் காப்பீட்டுக்காக 2021-ம் ஆண்டு காப்பீடு செய்து இருந்தேன். இதுவரை அந்த தொகை வரவில்லை. வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். எந்த கூட்டத்துக்கும் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் முறையாக பங்கேற்பது இல்லை.

ஏரிகளிலிருந்து மண் எடுக்க முறையான அறிவிப்புகள் இல்லை. மண் எடுப்பதற்கான அனுமதி வேண்டும்.

கலெக்டர் :- விவசாயத்திற்கு மண் வேண்டி விண்ணப்பித்திருந்த 60 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனு அளித்தால் அடுத்த வாரத்திலேயே மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். விவசாயத்திற்கு கட்டாயம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. விவசாயிகள் மனுக்களை வழங்கிடலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, துணை இயக்குனர் (தோட்டக்கலை) லதா மகேஷ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story