கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்


கோவை மாவட்டத்தில் 9 மையங்களில்  நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 May 2023 6:00 AM IST (Updated: 8 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் என்ற நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, சரவணம்பட்டி கோவை பப்ளிக் பள்ளி, புலியகுளம் வித்யா நிகேதன் பள்ளி, துடியலூர் விவேகம் பள்ளி, வட்டமலைபாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, கோவை - பொள்ளாச்சி ரோடு கற்பகம் அகாடமி, பட்டணம் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி, திருச்சி ரோடு ரத்தினவேல் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காளப்பட்டி ரோடு நேரு நகர் பிப் பள்ளி ஆகிய 9 மையங்களில் நீட் தேர்வு நேற்று நடந்தது. மதியம் 2.20 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் நுழைவு சீட்டு மற்றும் அடையாள சான்று மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மின்னணு சாதனம் அனுமதி இல்லை

கொரோனா காரணமாக மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப நிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போடவும் அனுமதிக்கப்பட வில்லை. கடும் கட்டுப்பாடுகள் இருந்ததால் மாணவிகள் சிலர் டி-சர்ட் அணிந்து வந்து தேர்வை எழுதினர்.

அனுமதிச் சீட்டில் கேட்கப்பட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

5,047 பேர் எழுதினர்

மதியத்துக்கு மேல் தோ்வு நடந்ததால் சில மாணவ-மாணவிகள் சாப்பிடாமலேயே தேர்வுக்கு சென்றனர். சிலருக்கு பெற்றோர் உணவு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைத்தனர். கோவையில் நடந்த நீட் தேர்வை எழுத 9 மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்பட மொத்தம் 5,185 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,047 பேர் தேர்வு எழுதினர். 138 தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.


நீட் தேர்வு எளிதாக இருந்தது

மாணவ-மாணவிகள் கருத்து

நீட் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

எளிதாக இருந்தது

நீட்தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புலியகுளம் மாணவி அனுசியா :- நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்தேன். நீட் தேர்வுக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். இந்த தேர்வு எழுதுவதற்காக நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தேர்வு மையத்துக்கு வந்தேன். நீட் தேர்வை சிறப்பாக எழுதி உள்ளேன். இயற்பியல் பாடத்தில் கேட்கப்பட்ட சில வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. மற்றபடி அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது.

மேட்டுப்பாளையம் மாணவி அக் ஷரா :- நான் முதல் முறையாக நீட் தேர்வை எழுதி உள்ளேன். இதனால் சற்று பயமாக இருந்தது. தேர்வுக்காக ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெற்றேன். விலங்கியல் பாட வினாக்கள் எளிதாக இருந்தது. பிற பாடத்துக்கான வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் இந்த தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல மதிப்பெண் கிடைக்கும்

பேரூர் மாணவர் பாலச்சந்தர் :- மருத்துவ படிப்பு எனது கனவு. இதனால் நான் நீட் தேர்வை தற்போது 4-வது முறையாக எழுதி உள்ளேன். இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. இதனால் இதில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்புக்கு செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்.

சின்னத்தடாகம் மாணவி மீன லோஷினி :- 270 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் இயற்பியல் பாட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்றபடி அனைத்து பாடங்களும் மிகவும் எளிதாக இருந்தது. இதனால் இந்த தேர்வை மிகுந்த உற்சாகத்துடன் எழுதி முடித்தேன்.

நியூசித்தாபுதூர் மாணவர் அபே சிங் :- நான் பள்ளியில் படித்துக் கொண்டே நீட் தேர்வுக்கு நன்கு பயிற்சி பெற்றேன். இதனால் இந்த தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இந்த தேர்வில் எனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

===============

4 கி.மீ. தூரம் ஓடிவந்து தேர்வு எழுதிய மாணவர்

பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் சஜித். இவருக்கு கோவை புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இவர், நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து தனது நண்பர் நரேனுடன் பஸ் மூலம் காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்துக்கு வந்தார். அவருக்கு தேர்வு மையத்துக்கு எந்த பஸ்சில் செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால் அவர் தனது செல்போனில் உள்ள மேப்பை பார்த்து தனது நண்பருடன் தேர்வு மையத்துக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடியே வந்து சேர்ந்தார். இதனால் மணி மதியம் 1.35 ஆனது. 1.30 மணியை தாண்டி தேர்வு மையத்துக்கு வந்ததால் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க வில்லை. உடனே அங்கிருந்த பிற மாணவர்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து, சஜித்தை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதை ஏற்று அதிகாரிகள் சஜித்தை தேர்வு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.


Next Story