திருட்டு போன ரூ.75 லட்சத்திலான 505 செல்போன்கள் மீட்பு


திருட்டு போன ரூ.75 லட்சத்திலான 505 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.75 லட்சம் மதிப்புள்ள 505 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவற்றை மீட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன 505 செல்போன்கள் மீட்கப்பட்டது. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு செல்போனை உரியவர்களிடம் வழங்கினார். இந்த செல்போன்களின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். செல்போனை கண்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.1½ கோடி மதிப்பிலான 1,051 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம். பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ, திருட்டுப் போனாலோ போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் போலீஸ் இணையதளத்திலும் (https://eservices.tnpolice.gov.in) தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

தமிழகத்திலேயே அதிகமான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மாவட்டம் குமரி என்ற பெயரை பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளது என்று சொல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் சூப்பிரண்டுகள் சுப்பையா, மதியழகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story