மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 51 பேர் கைது


மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 51 பேர் கைது
x

மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

பா.ம.க.வினர் மறியல்

நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து, அப்பகுதி மக்களுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், அன்புமணி ராமதாசை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரியலூரில் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அரியலூர்-செந்துறை ரவுண்டானா பகுதியில் அரியலூர் நகர செயலாளர் விஜி, வக்கீல் மாரிமுத்து உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்ய அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் மறிலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் பஸ் நிலையம் அருகே பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் மணிமாறன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். வி.கைகாட்டியில் ஒன்றிய செயலாளர் செம்மலை தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்

இதேபோல் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் பா.ம.க.வினர் நகர செயலாளர் பரசுராமன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இந்நிலையில் அந்த வழியாக வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான அதிரடிப்படை போலீசார், பா.ம.க.வினர் 13 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மறியல் போராட்டத்தில் பங்கேற்க தண்டலை கிராமத்தில் இருந்து வந்த பா.ம.க.வினர், போராட்டம் முடிந்து விட்டதை அறிந்து ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கி 2 பேர் பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story