நடப்பாண்டில் இதுவரை 529 போக்சோ வழக்குகள் பதிவு


நடப்பாண்டில் இதுவரை 529 போக்சோ வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடப்பாண்டில் இதுவரை 529 போக்சோ வழக்குகள் பதிவு

கோயம்புத்தூர்

கோவை

கோவை சரகத்தில் நடப்பாண்டில் 529 போக்சோ வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக பதிவாகி உள்ளதாக ஐ.ஜி.சுதாகர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

கோவை சரகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன. கோவை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஐ.ஜி.சுதாகர் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் போலீசாருக்கு உடல் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவியை தனியார் மருத்துவமனை உதவியுடன் போலீசாருக்கு வழங்கினார். இதில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஐ.ஜி.சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

529 போக்சோ வழக்குகள் பதிவு

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கோவை சரகத்தில் 142 கொலை வழக்குகள் பதிவானது. அதுவே நடப்பாண்டில் இதுவரை 91 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதில் 90 வழக்குகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளான போக்சோ வழக்குகள் கடந்த ஆண்டு 431 வழக்குகள் பதிவாகின. அதுவே நடப்பாண்டில் இதுவரை 529 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் கடந்த ஆண்டு 17 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டது. நடப்பாண்டில் 87 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக ஒருவருக்கு 70 அண்டு சிறை தண்டனையும், 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 பேருக்கு 40 ஆண்டு சிறை தண்டனையும் பெற்றுத்தரப்பட்டு உள்ளது.

குண்டர் தடுப்பு சட்டம்

1054 கஞ்சா வழககுகள் பதிவு செய்யப்பட்டு 1420 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு 123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். நடப்பாண்டில் 155 பேர் வரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 2,220 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,370 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 44 ஆயிரத்து 358 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 168 குட்கா விற்பானையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

கோவை சரக்கத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இருக்கும் கிராமங்களாக கண்டறியப்பட்டு அவற்றில் 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டு உள்ளது. 308 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேற்கு மண்டலத்தை கஞ்சா இல்லாத மண்டலமாக மாற்றுவதே இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story