பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவருக்கு 55 நாட்கள் சிறை

வடபாதிமங்கலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவருக்கு 55 நாட்கள் சிறை தண்டனை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலம் போலீஸ் சரகம், அரிச்சந்திரபுரம், மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது40). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி குற்றங்களில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு, சிலம்பரசன் 1 வருடம் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்று சிலம்பரசனுக்கு ஒழுங்கு நடவடிக்கை குறித்து மன்னார்குடி உதவி கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி நடப்பதாக வாக்குறுதிகளை அளித்த சிலம்பரசன் ஒரு வருடம் முடிவதற்குள் கடந்த 8-ந் தேதி வடபாதிமங்கலம் ஸ்டூடியோ உரிமையாளர் மகேந்திரன் என்பவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் சிக்கினார். இதனால் 1 வருடம் முடியும் முன்பே ஒழுங்கு நடவடிக்கையை கடைபிடிக்க தவறியதால், சிலம்பரசனுக்கு மீதி உள்ள 55 நாட்கள், ஜாமீனில் வெளியே வர முடியாதவாறு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி உத்தரவிட்டார். அதன்படி, வடபாதிமங்கலம் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.