கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த 57 ஆயிரம் சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த 57 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 May 2022 8:01 AM IST (Updated: 30 May 2022 10:11 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மலர் கண்காட்சியை 57 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளதாகவும்,இதன் முலம் ரூ. 17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்.

திண்டுக்கல்


சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளு, குளு சீசனையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் வெகுவிமரிசையாக தொடங்கியது.

இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களாலான திருவள்ளுவர் சிலை, மயில் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முதன்முறையாக 6 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

சாரல் மழை

இதனிடையே நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே நேற்று காலை சுமார் 11 மணி முதல் மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அடிக்கடி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். நேற்று மாலையில் கொடைக்கானலில் இருந்து திரும்பிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் சீரமைப்பு பணிகள் காரணமாக நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

ரூ.17 லட்சம்

மலர் கண்காட்சி குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியராஜன், பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் கூறுகையில், மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்காரணமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடந்த 6 நாட்களில் சுமார் 56 ஆயிரத்து 785 பேர் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு சுமார் ரூ.17 லட்சம் வருவாய் கிடைத்ததுள்ளது என்றனர்.


Next Story