6 அழகிகள் மீட்பு; 4 புரோக்கர்கள் கைது
கோவையில் 2 அடுக்குமாடி குடியிருப்பில் 6 அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கோவை
கோவையில் 2 அடுக்குமாடி குடியிருப்பில் 6 அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது42). இவர் சரவணம்பட்டியிலிருந்து துடியலூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இவரது வாகனத்தை வழிமறித்த இருவர் தங்களிடம் உல்லாசமாக இருக்க அழகிகள் உள்ளனர் என்று கூறியுள்ளனர். அதற்கு ஜேசுதாஸ் தன்னிடம் பணம் இல்லை, நான் ஏ.டி.எம். சென்று பணம்எடுத்து வருகிறேன் என்று கூறி, அங்கிருந்து சென்று சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
அழகிகளை வைத்து விபசாரம்
அப்போது அங்கு ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது. இதில் புதுச்சேரி தாசப்பாபாளையத்தைச் சேர்ந்த வன்னியப்பன் என்பவரது மகன் பிரவீன் குமார் (33), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கலம் பல்லடம் ரோட்டை சேர்ந்த ஜாபர் அலி என்பவரது மகன் முகமது ஆசிப் (24), திண்டுக்கல் மாவட்டம் முத்து நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகன் மதன் தாஸ் (25) ஆகியோர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது அழகி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது அழகி, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது அழகி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது அழகி, டெல்லியைச் சேர்ந்த 33 வயது அழகி ஆகிய 5 பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது.
4 புரோக்கர்கள் கைது
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார், புரோக்கர்கள் பிரவீன் குமார், முகமது ஆசிப், மற்றும் மதன் தாஸ் ஆகிய 3 மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுபோல் கோவை காந்திபுரம், சத்தி ரோடு, அலமு நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது.
உடனே அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார். அப்போது குளு குளு அறையாக மாற்றி அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அங்கிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். புதுச்சேரி, கோரிப்பேட்டையை சேர்ந்த புரோக்கர் சூரிய பிரகாஷ் (19) கைது செய்யப்பட்டார். செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.