சேலத்தில் அமுதசுரபி நிறுவனம் நடத்தி ரூ.58 கோடி மோசடி: பொது மேலாளரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


சேலத்தில் அமுதசுரபி நிறுவனம் நடத்தி ரூ.58 கோடி மோசடி: பொது மேலாளரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x

சேலத்தில் அமுதசுரபி என்ற பெயரில் தனியார் கூட்டுறவு நிறுவனம் நடத்தி ரூ.58 கோடி மோசடி வழக்கில் கைதான பொது மேலாளரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

சேலம்

ரூ.58 கோடி மோசடி

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜெயவேல். இவர், தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் தொடங்கி அதிக வட்டி தருவதாக ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளார். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அமுதசுரபி பெயரில் 94 கிளைகளை தொடங்கி ரூ.58 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கத்தின் தலைவர் ஜெயவேல், கணக்காளர் கண்ணன், இயக்குனர்கள் தங்கப்பழம், சரண்யா ஆகியோரை கைது செய்தனர்.

கோர்ட்டில் சரண்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி பணத்தில் பெருந்தொகையானது, கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் பிரேமானந்தாவிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தநிலையில், கடந்த 14-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பின்னர் அவரை நீதிபதி செந்தில்குமார் வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காவலில் எடுத்து விசாரணை

இதனிடையே, பிரேமானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கோவை கோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் இந்த மோசடி குறித்து பிரேமானந்தாவை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story