6 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்
கோத்தகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத 6 பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்தார்.
கோத்தகிரி
கோத்தகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத 6 பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்தார்.
அதிகாரிகள் ஆய்வு
பள்ளி மாணவ-மாணவிகளுக்காக இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகுதி குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும் என்று அரசும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மே மாத இறுதியில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக ஊட்டி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களின் தகுதிகள் குறித்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அபராதம்
இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா நேற்று காலை கோத்தகிரி பகுதியில் இயக்கப்பட்ட பள்ளி வாகனங்களில் பாத்துகாப்பு அம்சங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விதிகளை மீறி கேமராக்கள் பொருத்தாமல் 6 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், உடனடியாக கேமராக்கள் பொருத்தி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.