6 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்பட்டன

6 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மேட்டூர்:-
6 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மேட்டூர் அணை
மேட்டூர் காவிரி பாலம் அருகே தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ரோகு, கட்லா. மிர்கால் போன்ற மீன் இன குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விரல் அளவு வளர்த்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற மீன் குஞ்சுகள் மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீன்வளத்தை பெருக்க தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் இருப்பு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான மாசிலாபாளையம் பகுதியில் சுமார் 8 சென்டி மீட்டர் அளவு கொண்ட ரோகு, கட்லா, மிர்கால் போன்ற 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மீன் குஞ்சுகளை மேட்டூர் அணையில் விட்டார்.
3 மாதத்தில் வளர்ச்சி
நிகழ்ச்சியில் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் (தர்மபுரி), மேட்டூர் உதவி இயக்குனர் (பொறுப்பு) கோகுலரமணன், மேட்டூர் நகர்மன்ற துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் இளம்பருதி, சீனிவாசன், இளங்கோ, மேட்டூர் நகர பா.ம.க. செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அணையில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் சுமார் 3 மாதத்திற்கு பிறகு நன்கு வளர்ச்சி பெற்று விடும். அதன்பிறகு மீன்களை மேட்டூர் மீனவ கூட்டுறவு சங்கத்தின் உரிமம் பெற்ற மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த மீன்கள், மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.