ரூ.6½ லட்சம் மதுபானங்கள் அழிப்பு
பொள்ளாச்சியில் பறிமுதல் செய்த ரூ.6½ லட்சம் மதுபானங்கள் அழிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கள்ள மார்க்கெட், சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன சோதனையில் அளவுக்கு அதிகமாக கொண்டு சென்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நடப்பாண்டில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5,486 மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையம் பின்புறம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை கொட்டி அழிக்கும் பணி நடந்தது. இதற்காக மதுபானத்தை கொட்டி அழிக்க குழி தோண்டப்பட்டது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், மாவட்ட கலால் அலுவலர் சசிரேகா, கலால் மேற்பார்வை அலுவலர் அலமேலு மங்கை, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் முன்னிலையில் மொத்தம் ரூ.6.58 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை தரையில் கொட்டி அழித்தனர்.