சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம் -அமைச்சர் ஆய்வு


சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம் -அமைச்சர் ஆய்வு
x

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் இருவழி ரெயில்வே மேம்பாலத்துக்கு பதிலாக 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டப்பட உள்ள பகுதியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் உள்ள இருவழி ரெயில்வே மேம்பாலம் 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டப்பட இருக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் அமைந்துள்ள இருவழி ரெயில்வே மேம்பாலத்துக்கு பதிலாக 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டப்படவுள்ளது. 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அம்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள இந்த ரெயில்வே பாதை (கடவு எண்.64) சென்னை - அரக்கோணம் சாலை சென்னை கோட்டத்திற்கு உட்பட்டதாகும். விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், தற்போதைய மேம்பாலத்தின் அருகில் ரூ.13.5 கோடி மதிப்பீட்டில், 6 வழி மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு உத்தேசமாக 1,150 சதுர மீட்டர் நில எடுப்பு செய்யப்பட வேண்டும்.

ஒப்பந்தம் கோரப்படுகிறது

ரெயில்வே மேம்பாலம் பண ஒப்பளிப்பு அடிப்படையில், ரெயில்வே பணிகளின் கீழ், தமிழக அரசுடன் இணைந்து, தற்போதைய இருவழி மேம்பாலத்தை 6 வழியாக மேம்படுத்தப்படஇருக்கிறது. நிலஎடுப்பு மற்றும் வடிவமைப்பு முழுமை பெற்றவுடன் நிர்வாக ஒப்புதல் பெற்று, இப்பாலப்பணிகள் ரெயில்வே துறையும், அணுகுசாலை நெடுஞ்சாலைத்துறையும் முறையாக ஒப்பந்தம் கோரப்பட்டு, மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர், சென்னை மெட்ரோ தலைமை பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story