திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வீணாக கிடக்கும் மாநகராட்சி வணிக வளாக கட்டிடங்கள்- செயல்பாட்டுக்கு வருவது எப்போது?


திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வீணாக கிடக்கும் மாநகராட்சி வணிக வளாக கட்டிடங்கள்- செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 28 Jun 2023 2:52 AM IST (Updated: 28 Jun 2023 1:46 PM IST)
t-max-icont-min-icon

திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வீணாக கிடக்கும் மாநகராட்சி வணிக வளாக கட்டிடங்கள்- செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

ஈரோடு

ஒரு பகுதியின் வளர்ச்சி என்பது அங்குள்ள சாலை, மழை நீர் வடிகால், பிரமாண்ட கட்டிடங்கள், அவற்றின் முறையான பயன்பாடு ஆகியவற்றையும் சார்ந்தது ஆகும். வெளியூர்களில் இருந்து மாநகரங்களுக்கு வருபவர்கள் பார்த்து வியப்பது பிரமாண்ட வளர்ச்சித்திட்ட பணிகளைத்தான். குறிப்பாக அழகிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பரபரப்பாக இருந்தாலும் பழுதடையாத சாலைகள், நேர்த்தியான வாகன நிறுத்தங்கள், அனைவரையும் கவரும் கடைவீதிகள் என்று மாநகரின் சிறப்புகள் பட்டியலில் உயர்ந்து கொண்டே போகும்.

பட்டியல்

இப்படி ஒரு சில விதிகளை பார்த்தால் கூட ஈரோடு மக்களை கவரும் மாநகரம் என்ற நிலையில் சற்று பின்தங்கி இருப்பதாகவே பொதுமக்கள் கருதுகிறார்கள். நகரின் மையப்பகுதியில் இடைவிடாமல் நெருக்கும் போக்குவரத்து. வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாமல் சாலையை அடைக்கும் ஆக்கிரமிப்புகள். வளர்ச்சித்திட்ட பணிகள் என்று பொதுமக்களைப்பற்றி சிறிதும் கூட யோசிக்காமல் சாலைகளை அடைத்து வைக்கும் அவலம். 3 அல்லது 4 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி.பூங்கா என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

வணிக வளாகங்கள்

இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்து இருப்பது மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் ஜவுளி சந்தை மற்றும் காளைமாட்டுச்சிலை வணிக வளாக கட்டிடங்கள்.

கனிமார்க்கெட்டில் தினசரி மற்றும் வாராந்திர கடைகள் இயங்கி வருகின்றன. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை வாராந்திர கடைகளில் அனைத்து வகை ஜவுளிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஈரோடு மட்டுமின்றி சுற்றுவட்டார நகரங்கள், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிகளை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஜவுளி வாங்கிச்செல்கிறார்கள்.

கனிமார்க்கெட் ஈரோடு மாநகராட்சி மூலம் இயக்கப்படும் சந்தையாகும். இங்கு வாராந்திர மற்றும் தினசரி கடை அமைக்கும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பான கடைகள் இல்லாத நிலை இருந்தது. எனவே மாநகராட்சி சார்பில் பிரமாண்ட வணிக வளாகம் கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதன்படி ரூ.51 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது 200-க்கும் மேற்பட்ட கடைகளுடன், தரைத்தள வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் 3 அடுக்கு வணிக வளாகம் கட்டப்பட்டது. ரூ.54 கோடியே 49 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்த பணிகள் முடிந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் 6 மாதங்களுக்கு முன்பே திறந்து வைத்தார். ஆனால், இதுவரை கனிமார்க்கெட் வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாக கிடக்கிறது. இதுபோல் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆங்கிலேயர் காலத்து பங்களா இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. ரூ.17 கோடியே 32 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த 2 கட்டிடங்களும் ஈரோட்டின் அடையாளமாக பிரமாண்டமாக அழகாக உள்ளது.

வீணாகிறது

ஆனால் 6 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகிப்போகிறது. கனிமார்க்கெட் வணிக வளாக புதிய கட்டிடம் குப்பைகள் சேரும் இடமாகி விட்டது. மதுபோதைக்கு அடிமையானவர்கள், வேலைகளுக்கு செல்லாமல் சோம்பலாக படுத்து இருப்பவர்கள் என பலரும் ஓய்வு எடுக்கும் வளாகமாக இது மாறி வருகிறது. மாலை நேரங்களில் திறந்தவெளி மது பாராக இது மாறி இருக்கிறது. மதுபிரியர்கள் மதுக்குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு நொறுக்கி செல்கிறார்கள். சமூக விரோதிகளில் பதுங்கு பகுதியாகவும் இது மாறி வருகிறது.

அருகிலேயே தற்காலிக ஜவுளி சந்தை இயங்குகிறது. இரவு நேரத்தில் கடையை மூடிச்செல்ல அச்சமாக இருப்பதாக கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

பெருமை இழக்கும்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மாநகராட்சி மூலம் நடத்தப்படும் நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கானதாக இருக்க வேண்டும். ஈரோட்டில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் உள்பட பல நிறுவனங்கள் முன்காலத்தில் இருந்தே குறைந்த கட்டணத்தில் ஏழை, எளியவர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கனி மார்க்கெட் உள்ளிட்ட வணிக பகுதிகளும் நடத்தப்பட்டு வந்தன. குறைந்த வாடகை, குறைந்த வைப்புத்தொகை உள்ளிட்ட காரணங்களால் அங்கு கடை வைக்கும் வியாபாரிகள் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறார்கள். அது ஏழை, எளிய மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால், தற்போது மார்க்கெட் நிலவரம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கட்டண நிர்ணயம் செய்யப்படும்போது, தனியார் கடைகளுக்கு இன்னும் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து வகை வியாபாரிகளும் பாதிக்கப்படுவதுடன், பொருட்கள் விலையும் உயரும்.

ஈரோட்டுக்கு வந்தால் ஜவுளி அதிகம் கிடைக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்ற மனநிலை வெளியூர்களில் இருந்து வரும் அனைவருக்கும் உண்டு. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளால் ஈரோடு ஜவுளி நகரம் என்ற பெருமையை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது.

வருவாய் இழப்பு

6 மாதங்களுக்கும் மேலாக மிகப்பெரிய வணிக வளாகங்கள் வீணாக கிடக்கிறது. பல கோடி ரூபாய் செலவிட்டு கட்டிய கட்டிடத்தை குறைந்த வாடகைக்கு வழங்கினால் செலவான தொகையை எடுக்க முடியுமா? என்ற வியாபாரம் சார்ந்த கேள்வியை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். ஆனால், இது வியாபாரிகளின் வசதிக்காக கட்டப்பட்டதாக யாரும் உணரவில்லை.

வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தை நிர்ணயித்து இருந்தால் 6 மாதங்களில் சில கோடி ரூபாய்களை வருவாயாக ஈட்டி இருக்க முடியும். ஆனால் அதையும் இழந்து கட்டிடமும் பயன்படுத்தாத நிலையிலேயே பழுதடையும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.

குற்றச்சாட்டு

மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, கனி மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தை போன்றே, காளை மாட்டுச்சிலை வணிக வளாகமும் அதிக வாடகை, அதிக வைப்புத்தொகை காரணமாகவே இன்னும் செயல்பாட்டுக்கு வர முடியாத நிலையில் இருப்பது தெரியவருகிறது.

இந்த கட்டிடங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு, மாநகராட்சியின் வருவாய்த்துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மாநகராட்சி கட்டிடங்களுக்கு எப்படிப்பட்ட முன்வைப்புத்தொகை, வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னையில் இருந்து உத்தரவு பெற்று அதன்படி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

அதே நேரம், கனிமார்க்கெட்டுக்கு வெளியே தனியார் கடைகளில் அதிக வாடகை கொடுத்து கடை நடத்தி வரும் வியாபாரிகள் மாநகராட்சி வணிக வளாக கடைகளை எடுக்க ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களுக்கு கடைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வாடகை நிர்ணயம் உயர்த்தி செய்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஒத்துழைப்பு

ஈரோடு மாநகராட்சிக்காக திறக்கப்பட்ட இந்த 2 கட்டிடங்களும் வீணாக போகும் முன், லாப நோக்கத்தை விட்டு பொதுநல நோக்கத்துடன் வணிக வளாக கட்டிடங்கள் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் முன்வரவேண்டும். வியாபாரிகளும் அரசின் சரியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story