கோச்சடையான் படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி - சென்னை அமர்வு நீதிமன்றம்


கோச்சடையான் படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி - சென்னை அமர்வு நீதிமன்றம்
x
தினத்தந்தி 9 Aug 2023 1:32 PM IST (Updated: 9 Aug 2023 1:42 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியின் கோச்சடையான் படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை சென்னை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து, இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் கடன் பெற்றதாகவும் இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014-ல் வழங்கிய ரூ.5 கோடிக்கான காசோலை பணமின்றி திரும்பியது. அதையடுத்து முரளி மனோகருக்கு எதிராக அபிர்சந்த் நஹார் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதி்த்து கடந்த 2021 டிசம்பர் 4-ந் தேதி தீர்ப்பளித்தது. மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.5 கோடிக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வீதம் ரூ.7.70 கோடியை வழங்க வேண்டும் என முரளி மனோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை 6-வது பெருநகர கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.தஸ்னீம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முரளி மனோகர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி, அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்கவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

1 More update

Next Story