குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது
ஜேடர்பாளையம் பகுதியில் குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்
9 குடிசைகள் எரிந்தன
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (70). இவர் தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக குடிசைகள் அமைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை அந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
இதில் தொழிலாளர்கள் குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதேபோல் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (50). இவர் அதே பகுதியில் வெல்ல ஆலை கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகையில் உள்ள குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வெல்ல ஆலை மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
6 பேர் கைது
இந்த நிலையில் நேற்று ஜேடர்பாளையம் பகுதியில் காரில் வந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் வெல்ல ஆலையில் உள்ள குடிசைகளுக்கு தீ வைத்தது கரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (29) என்பதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் (28), தமிழரசன் (24), சுதன் (25), பிரபு (37) மற்றும் சண்முகசுந்தரம் (43) ஆகிய 5 பேரும் கபிலர்மலையில் கடந்த 13-ந் தேதி சந்தைக்கு வந்தவர்களை தாக்கியதும் தெரியவந்தது.
அதனையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.