துக்க நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 6 பேர் மயக்கம்
நாட்டறம்பள்ளி அருகே துக்க நிகழ்ச்சியில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்திருந்த 6 பேர் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
துக்க நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கிட்டப்பையனூரில் நேற்று முன்தினம் ஜகதா என்பவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை வீட்டு வராண்டாவில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தனர்.
அப்போது நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பலர் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியின் அருகில் அமர்ந்திருந்தனர்.
மின்சாரம் தாக்கியது
அப்போது திடீரென குளிர் சாதனப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்தது, அருகில் அமர்ந்திருந்தவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் வாலூர் பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 45), ராதா (35), கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நித்தீஷ் (13), நிகிஜா (13), சந்தியா (18), யுவஸ்ரீ (11) ஆகிய 6 பேர் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் தினேஷ் தலைமையில் சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.