மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்த விவகாரத்தில், மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னூர்
மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்த விவகாரத்தில், மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மின்சாரம் தாக்கி சாவு
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்ரையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்(வயது 22). பெயிண்டர். இவருடைய மனைவி மகேஷ்(21). சம்பவத்தன்று குடி போதையில் இருந்த சுஜித் தனது மனைவி மகேஷிடம் கஞ்சப்பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் கஞ்சப்பள்ளியில் உள்ள துரைசாமி(60) என்பவரது தோட்டத்தில் சுஜித் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அன்னூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி மகேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
இந்த நிலையில் சுஜித் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த தோட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அதில் ஒரு தென்னை மரத்தில் ஏறும்போது மின்சாரம் தாக்கி சுஜித் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து துரைசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த ஊத்துப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(45), அல்லப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன்(49), கஞ்சப்பள்ளியை சேர்ந்த பழனிச்சாமி(57), முத்துக்குமார்(50), தாசாபாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான்(50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.