தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் சிக்கினர்

கடலூர் மாவட்டத்தில் சாகா் கவாச் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அதன்படி போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் பிடிபட்டனர்
கடலூர் முதுநகர்,
கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தீவிரவாத செயல்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்காக ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒரு முறை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஒத்திகைக்கு 'சாகர் கவாச்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் கடல் வழியாகவும், தரை வழியாகவும் நகருக்குள் ஊடுருவ முயற்சி செய்வார்கள். அப்போது கடலோர காவல்படை மற்றும் போலீசார் அவர்களை கண்டறிந்து பிடிப்பார்கள்.
போலி வெடிகுண்டுகள்
அதன்படி கடலூர் மாவட்டத்தில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ராசாக்குப்பம் கடல் பகுதியில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் வந்த 3 கமாண்டோ வீரர்களை கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் பூச்சிமேடு பகுதியில் செயல்பாட்டில் இல்லாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்க்க திட்டமிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 2 போலியான வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
மடக்கி பிடித்த போலீசாா்
இதேபோல் தாழங்குடா பகுதியில் பைபர் படகில் மாறுவேடத்தில் வந்த 3 கமாண்டோ வீரர்களை போலீசாா் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்தும் 2 போலி வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவர்கள் புதுச்சேரி நூலக கட்டிடத்தின் மீது வெடிகுண்டு வீசி, அதனை தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. போலீசாா் நடத்திய இந்த சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையால் நேற்று கடலோர கிராமங்கள் பரபரப்புடன் காணப்பட்டது.






