வேப்பனப்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் செத்தன
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓபிலேசன் (வயது 45). விவசாயியான இவர், 24 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஓபிலேசன் தனது ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. மேலும் ஒரு ஆட்டை மர்ம விலங்கு தூக்கி சென்றது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிலேசன், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.