பராமரிப்பின்றி காணப்படும் ஆங்கிலேயர் கால குளம்-சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி 6-வது வார்டு பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி 6-வது வார்டு
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் வடக்கு பகுதியில் 6-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் பாபா சாகிப் தெரு, மகந்தா தெரு, இப்ராஹிம் குடோன் தெரு, சர்புதீன் ரோடு, திருப்பத்தூர் ரோடு, கான் தெரு உள்ளிட்ட 10 தெருக்கள் அமைந்துள்ளன. இந்த வார்டில் 557 வீடுகள் அமைந்துள்ளன. 797 ஆண் வாக்காளர்கள், 760 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,557 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர்.
இந்த வார்டில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க 5 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தர்மபுரி பகுதியில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சர் தாமஸ் மன்றோ மழை நீர் சேகரிப்பை உருவாக்க கட்டிய மீரா சாஹிப் குளம் இந்த வார்டில் அமைந்துள்ளது. இதேபோல் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வழிபாடு நடத்தும் டேக்கிஸ் பேட்டை மசூதியும் இங்கு அமைந்துள்ளது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
இந்த வார்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள 5 குடிநீர் தொட்டிகளில் 4 தொட்டிகள் பழுதடைந்து உள்ளன. இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மகந்தா தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. அவற்றை சீரமைத்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வார்டில் தெருக்களில் அமைந்துள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் சிறியதாக இருப்பதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கும் பிரச்சினை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வார்டு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
குளத்தில் குப்பைகள்
கான் தெருவை சேர்ந்த அமீப்:-
6-வது வார்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க குளம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த குளத்திற்குள் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த குளத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். இந்த குளத்திற்குள் சென்று வர முறையான வாசல் அமைத்து வழியை ஏற்படுத்த வேண்டும். கான் தெரு பகுதியில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இங்கு உள்ள சாலையை கான்கிரீட் சாலையாக மேம்படுத்த வேண்டும்.
இருளில் மூழ்கும் பகுதி
இப்ராஹிம் குடோன் தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம்:-
டேக்கிஸ் பேட்டை பகுதியில் அமைந்துள்ள மசூதிக்கு தொழுகை நடத்த ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதேபோல் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் சந்தையும் அதே பகுதியில் உள்ளது. இந்தநிலையில் மசூதி அருகே சாலைகள் இணையும் இடத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சரியாக எரியாததால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. எனவே உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும். இந்த வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் சில சாலைகள் பழுதாகி காணப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
பொது கழிப்பிட வளாகம்
பாபாசாகிப் தெருவை சேர்ந்த ஜெகேரா:-
பாபாசாகிப் தெருவில் உள்ள பூட்டுக்காரன் சந்து பகுதியில் அமைந்துள்ள பொது கிணறு பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறி உள்ளது. இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இங்குள்ள பழைய பொது கழிப்பிட வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை இடித்து அகற்றி விட்டு அங்கன்வாடி மையம் அல்லது சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும். டேக்கிஸ் பேட்டை பகுதியில் சாலைகள் இணையும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மன்றோ தூணை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.