சிக்னல் கோளாறால் 6 ரெயில்கள் தாமதம்


சிக்னல் கோளாறால் 6 ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக 6 ரெயில்கள் தாமதமாக சென்றன.

விழுப்புரம்

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் அதிகாலை 3.15 மணிக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 3.15 மணிக்கு விழுப்புரம் வந்தது.

பின்னர் 3.25 மணிக்கு அந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்வதற்காக சிக்னல் போடப்பட்டது. அந்த சமயத்தில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிக்னல் கிடைக்காமல் விழுப்புரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

சரிசெய்யும் பணி

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சிக்னல் கோளாறு காரணமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 3.30 மணிக்கும், திருநெல்வேலி- சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 3.40 மணிக்கும் விழுப்புரம் வந்த நிலையில் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதேபோல் ராமேஸ்வரம்- சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 3.45 மணிக்கும், தூத்துக்குடி- சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணிக்கும் கண்டம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டன. திருவனந்தபுரம்- சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு திருவெண்ணெய்நல்லூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

6 ரெயில்கள் தாமதம்

இதனிடையே சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், 45 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.25 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், 1 மணி நேரம் தாமதமாக அதிகாலை 4.50 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்னை எழும்பூருக்கு புறப்பட்டன.

இதேபோல் விழுப்புரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வர வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 4.45 மணிக்கும், 4 மணிக்கு வர வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5.15 மணிக்கும், 4.30 மணிக்கு வர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5.45 மணிக்கும் வந்தடைந்தன. அதன் பிறகு அடுத்த 10 நிமிடங்களில் மேற்கண்ட 3 ரெயில்களும் சென்னைக்கு புறப்பட்டன. ரெயில்களின் இந்த காலதாமதம் காரணமாக பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.


Next Story