ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
மதுரையில் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆடிட்டர் வீட்டில் கொள்ளை
மதுரை அண்ணாநகர், வண்டியூர் ரோடு, சங்கு நகரை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 48), ஆடிட்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு சென்றிருந்தார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அனைத்து பொருட்களும் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
பூட்டியிருந்த வீட்டில் 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைப்போன சம்பவம் வண்டியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.