புகையிலை பொருட்கள் விற்ற 60 கடைகளுக்கு 'சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற 60 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 18 Aug 2022 7:30 PM GMT (Updated: 18 Aug 2022 7:30 PM GMT)

சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 60 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 60 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

60 கடைகளுக்கு 'சீல்'

சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் நபர்களின் கடைகளை பூட்டி 'சீல்' வைக்கும் பணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்றதாக 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 30 கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்றதாக 234 கடைகளுக்கு ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் நடவடிக்கை

கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து சேலத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெட்டிக்கடைகளில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேசமயம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு யாராவது துணையாக இருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story