ரூ.23 லட்சத்தில் 60 கண்காணிப்பு கேமராக்கள்
மேல்விஷாரத்தில் ரூ.23 லட்சத்தில் 60 கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அஞ்சுமன் தெருவில் ரூ.12 லட்சத்திலும், பெரிய மசூதி தெருவில் ரூ.19½ லட்சத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அண்ணா சாலை, கத்தியவாடி சந்திப்பில் இருந்து நந்தியாலம் வரையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 கண்காணிப்பு கேமராக்களையும், கத்தியவாடி சந்திப்பில் இருந்து தனியார் கல்லூரி வரையில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 30 கண்காணிப்பு கேமராக்களையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ச.வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், துணைத் தலைவர் குல்சார் அகமது, நகராட்சி ஆணையாளர் சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.