விவசாயிகளுக்கு 60 மின்னணு தராசுகள்


விவசாயிகளுக்கு 60 மின்னணு தராசுகள்
x
திருப்பூர்


திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். தெற்கு உழவர் சந்தையில் 2 ஆயிரத்து 500 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 500 விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த உழவர் சந்தையில் உள்ள 121 கடைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். 67 கடைகளுக்கு மின்னணு தராசுகள் உள்ளன. மீதம் உள்ள விவசாயிகள் எடைக்கற்களுடன் கூடிய தராசுகளை பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக விவசாயிகள் அமைச்சர், எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து கோவை ஒழுங்குமுறை விற்பனை ஆணையம், வேளாண் விற்பனைக்குழு சார்பில் 60 மின்னணு தராசுகள் புதிதாக வாங்கப்பட்டு அவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தையில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு மின்னணு தராசுகளை வழங்கினார்கள். இதில் உதவி அலுவலர் சாந்தி, தி.மு.க. நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, நந்தகோபால், அய்யப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story